ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக எ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலையும், மற்றும் அவரது பின்னணி இசை சேர்ப்பை காட்டிலும் மேற்கத்தியவர்களால் அதிகமாக பாராட்டைப்பெற்றது M.I.A என்கின்ற ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம் பாடி இசையமைத்த பேப்பர் பிலேன்ஸ் மற்றும் ஒ சாயா என்னும் பாடல்கள் தான். இவற்றில் மாயாவின் படைப்புகளான பேப்பர் பிலேன்ஸ் கிராம்மி விருதுக்கும், ஒ சாயா ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லியினர் இசையமைப்பில் தன்னுடன் பணியாற்றியதற்காக ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கும் மேடையில் மறவாமல் மாயாவுக்கு நன்றி தெரிவித்ததை நினைவில் கொள்ளலாம்.
‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்,இவர் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர், ராப் இசை பாடகர். அரசியலையும், உலக வாழ்வியலையும் இவரது ராப் இசை படைப்புகளில் பிரதானமாக பிரதிபலித்து ரசிக்கும்படி வழங்குவது இவரது பெரிய வெற்றி என்கிறது ராப் இசை உலகம். ஈழத்தில் 17 ஜுலை 1977-ல் கலா மற்றும் அருட்பிரகாசம் தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது தந்தை அருட்பிரகாசம் தீவிர ஈழ ஆதரவாளர் மற்றும் அப்போதையை தமிழ் ஈழ மீட்பு போர்ப்படை (EROS) பணியாற்றியவர். முதலாம் உள்நாட்டு போரில் இலங்கை அரசு பூர்வக்குடி தமிழர்களையும், அவர்களது குடும்பங்களையும் கொலை செய்ய தொடங்கிய போது தனது தாயுடன உயிர் பிழைத்து சென்னைக்கு வந்தார். மீண்டும் தனது தந்தையை தேடி தாயுடன் ஈழம் சென்ற போது, இலங்கை அரசின் எதிரியாக கருதப்பட்ட இவர் தந்தையுடன் சேர்த்து, இவர்களையும் தேடியது இலங்கை அரசு. பிறகு மீண்டும் சென்னை வந்து, உறவினர்கள் உதவியால் 1988 -ல் தனது தாய், அக்காள் மற்றும் தம்பியுடன் லண்டனுக்கு அகதியாக சென்று அடைக்கலம் புகுந்தார் மாயா.
லண்டன் வாழ்வியலையும், ஈழ அரசியலையும் சித்தரித்த மாயாவின் graffiti ஓவியங்கள் 2001 -ல் Alternative Turner விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் மூலம் Elastica குழுவை சேர்ந்த ஜஸ்டின் ஃபிரிச்மேனின் தங்களது இரண்டாவது ஆல்பமான The Menance -ன் அட்டைப்படதுக்கு மாயவை நாடினார்.. அடுத்து அந்த குழுவின் அமெரிக்கா இசைப்பயணத்தையும், அவர்களது Elastica-வின் “Mad Dog God Dam” இசை வீடியோ பதிவையும் செய்யும் வாய்ப்பும் மாயாவுக்கு..அந்த பயணத்தில் தான் மாயாவுக்கு இசையின் மீது நம்பிக்கை பிறந்தது.. மேலும் லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்டின்ஸ் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் முதல் இசை ஆல்பமான அருளரில், கிலாங் (Galang) மற்றும் சன் பிளவர் (Sunflower) எனும் பாடல்கள் கல்லூரியின் வானொலியிலும், ஃபையில் ஷரிங்கிலும் அதிகமாக பிரபலமானது மட்டுமல்லாமல் ஷோ பிஸ் ரெகார்ட்சில்லும் அதிகமான பதிவை ஏற்படுத்தியது… அடுத்து வந்த மாயாவின் கலா (2005), இசை ஆல்பம் சென்சார்களில் சிக்கினாலும் பில் போர்டின் டாப் 200 பாடல்களில் 18 வது இடத்தை பெற்றது.
“கலா” இசை ஆல்பத்திலிருந்து வந்த பேப்பர் பிளேன்ஸ் பாடல், தற்போது இசை உலகின் பெரிய விருதான கிராம்மி விருதின் பக்கத்தில் நிற்கிறது . மேலும் இந்த பாடல் ஸ்லம்டாக் மில்லியினரில் பயன்படுத்தப்பட்டு உலக அளவில் அதிக பாராட்டுகளை வாங்கியிருக்கிறது. ஆனால் ஆஸ்கார் விருதுக்கு, படத்தின் ஒ சாயா பாடலுக்கு தான் மாயா பரிந்துரைக்கபட்டுள்ளார். மாயவை பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்த பெருமை ரஹ்மானை சேரும். இந்த படத்திற்கு முன் ரஹ்மானுடன் பணியாற்ற வில்லை என்றாலும், மாயாவின் பாடல்கள் பல ரஹ்மானின் ரெகார்டிங் ஸ்டுடயோவில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்லம்டாக் மில்லியினர் மூலம் இந்திய தமிழனும், ஈழத்து தமிழச்சியும் ஆஸ்காரின் விருதுப்பட்டியலில் நுழைந்து விட்டனர் என்பது உலக தமிழர்களின் அளவிட முடியாத பெருமையே!
தற்பொழுது கற்பமாக உள்ளதால் தன்னால் இரு விருது வழங்கும் விழாகளுக்கு செல்ல முடியாத சின்ன வருத்தமிருந்தாலும், தாய்மையின் உன்னத உணர்வுகளை அனுபவித்து, தன் குழந்தையின் வரவை நோக்கி சந்தோசமாகவே காத்திருப்பதாக சொல்கிறார் மாயா.
மாயாவின் இசை வீடியோகள்
பேப்பர் பிளேன்ஸ்(Paper Planes)..
கிலாங் (Galang)
சன் பிளவர் (Sunflower)
பாம்பூ பங்கா (Bamboo Banga)
(மாயாவின் பெரும்பாலான பாடல்களில் இந்திய திரை இசையின் தாக்கம் அதிகமாக இருக்கவே செய்கிறது. அதில் குறிப்பிட தக்கவைகள்.. பாம்பூ பங்கா (bamboo banga) பாடலில், நமது தளபதி படத்தின் காட்டுகுயிலு மனசுக்குள்ள முகப்பு இசையில் தொடங்கி… நடு நடுவே கோரஸ் பஜனைகள் சேர்ந்து கொள்கிறது. அதே போன்று hussel-லில் கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமாவின் முகப்பு இசை. இப்படி ஆங்காங்கே கொஞ்சம் ஒட்டுகள் இருக்கதான் செய்கிறது.. அதானே ராப்!)
..ரசனைக்காரன்