இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் அஸ்வினி தத், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், எடிட்டர் ஆண்டனி, சண்டைபயிற்சி இயக்குனர்கள் பீட்டர் ஹெயன் மற்றும் ஸ்டண்ட் சிவா, சவுண்ட்ஸ் மேற்பார்வையாளர் சமீபத்தில் நாம் இழந்த, மறைந்த H.ஸ்ரீதர் அவர்கள் என்று மீண்டும் சவுத் இந்தியன்ஸின் திறமைகள், வடநாட்டு மக்களை வாய் பிளந்து அதிசியக்க வைத்திருக்கிறது நமது தமிழ் கஜினியின் மறுபதிவான ஹிந்தி கஜினி தான்!
அதற்கு காரணம்..
ஆமிர் கான் எனும் இந்தியன்!
திறமை எங்கு இருந்தாலும் அதை தேடி, பாராட்டி அதை பெற்று படமாக்குவதில், ஈகோ இல்லாத நம் நாட்டு கலைஞன்! உண்மையாகவே பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் நம் நாட்டின் இரண்டாவது ஆஸ்கார் நம்பிக்கை! (முதலாவது ஆஸ்கார் நம்பிக்கைக்குக் கூட இந்த பண்புகள் இருந்ததாக தெரியவில்லை!)
கதை…அதே கதை தான்.. ஆனால் கிளைமாக்ஸ் மாற்றம் பெற்றுள்ளது, இந்திய திரையின் பழைய பல்லவியான பழிவாங்கும் படலம் புதுப்பொழிவில்! என்ன ஒரே சந்தோசம்.. கொஞ்சம் எதார்த்தத்தை தொட்டு பழிவாங்குகிறார் ஹிந்தி கஜினி!
ஆமிர் கான்.. சிறந்த நடிப்பை (சூர்யா போல் அதிகமாக சிரமப்பட்டு செய்யாமல்), அவருக்கான அதிர்வில் வெகு இயல்பாக நடித்து நம்மை வசியப்படுத்துகிறார்! அதே போல ஆட்டத்தில் நம்ம சூர்யா exercise பண்ணி சிரிக்க வைத்து போல் இல்லாமல் நளினமாக அவருடைய ஸ்டைலில் நடனத்தை பண்ணியிருக்கிறார். பாடல்களில் அழகாக சிரித்தே!.. மீண்டும் மீண்டும் பெண்களின் உள்ளங்களில் குடியேறுக்கிறார். (யப்பா ஆமிரு இந்த வித்தைய சொல்லி கொடுப்பா!.. பொறாமையா இருக்குப்பா! )
அசின்.. அதே நடிப்பு தான்..என் ஹிந்தி தோழி நன்றாக நடித்திருக்கிறார் என்று சொன்னதை மனமில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்! ஜியா கான் நயன்தாராவின் அதே பங்கு நடிப்பு (??)! புரிந்துகொள்வீராக!
ஹாரிஸ் ஜெயராஜின் அசத்தலான ஆர்பாட்டமான இசையை அமைதியாக அளந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஹிந்தி கஜினிக்கு. குசாரிஷ் மற்றும் பேக்கா இரண்டு பாடல்கள் கேட்கும் போது மட்டுமல்ல பார்க்கும் போதும் மனமயக்கும்.
ஹாரிஸ்காக நான் குடை பிடிக்கவில்லை .. ரஹ்மானுக்கு படத்தில் அதிகம் வேலையில்லை என்பது போல் பிண்ணனி இசையும் அப்படியே follow on செய்யப்பட்டுள்ளது. அந்த இரு பாடல்களின் இசையை வைத்தே பிண்ணனியில் பின்வாங்கியிருக்கிறார். ஆனால் ரஹ்மான்! அந்த இரு பாடல்களையும் கேட்கலாம்..கேட்கலாம்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
அடுத்த முக்கிய மூவருக்கு சபாஷ் என்றால்! அவர்கள்..
அதிர்வு அதிகமில்லாமல், அழகான கலர் செலுலாய்ட்டாய் ஹிந்தி கஜினியை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்.
அதே விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளை பதிவு பண்ணிய சண்டைபயிற்சி இயக்குனர்கள் பீட்டர் ஹெயன் மற்றும் ஸ்டண்ட் சிவா.( என்ன ரத்தவெறி காட்சிகள் அதே சதவிகிதத்தில்!) ஹிந்தி திரை உலகே அதிர்ந்து போய் பார்கிறதாம் சண்டைக்காட்சிகளை!
வழக்கத்துக்கு மாறாக காட்சிக்கு தேவையான மெல்லிய அதிர்வோடு கத்திரிப்போட்ட எடிட்டர் ஆண்டனி.
(ஆமிரும் அசினும் புதிய வீட்டில் கால் தடம் பாதிக்கும் சீன் இன்னும் கொஞ்சம் வேகமாக கத்திரிப்போட்டு இருக்கலாமோ? என்று தர டிக்கெட்டையே யோசிக்க வைத்து விட்டது அந்த ஒரு காட்சி)
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
கடைசி சான்ஸ்.. நல்ல மார்க் எடுத்தே பாஸ் பண்ணிடீங்க பாஸ்!
(இதை ஏன் நான் சொல்றேன்னா ஹிந்தி கஜினிக்கு முன்பு எடுத்த தெலுங்கு ஸ்டாலின் என்கிற கொத்து படம் எடுத்து சிரஞ்சீவி காருவுக்கே மெகா மகா flop கொடுத்ததை நினைவில் கொண்டு தான் ஞாபகப்படுத்தி சொல்கிறேன்!)
ஹிந்தி கஜினியை பொறுத்தவரை ஆமிர் கானின் மேற்பார்வையில், உங்கள் இயக்கமும், திரைக்கதையும் பழையதை காட்டிலும் புதிய பொழிவு பெற்று இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை எதார்த்தமான நகர்வுகளுடன் காட்சியமைத்தது! அருமை! ரசிக்கும்படியாகவும் இருந்தது!
மொத்தத்தில் பழைய படம் அதிகமாக ஞாபகபடுத்தினாலும்,அருமையான ஆமிர் கானின் அழகான ஆரவார நடிப்பில் அவற்றை மறைத்து ஹிந்தி கஜினியாக நம் மனதில் மீண்டும் இடம்பிடிக்கிறார் என்று ஹிந்தி தெரிந்த நம்ம தர டிக்கெட் சொல்கிறார்.. சொல்கிறார்.. சொல்கிறார்!
ரசனைக்காரனுக்காக விமர்சனம் எழுதியது தர டிக்கெட்!
படத்தின் உண்மை நிலவரம் : ஹிந்தி கஜினி ஹிந்தி ரசிகர்களுக்கு புதியதோர் அனுபவத்தையளித்து வெற்றி வாகை சூடியுள்ளது! வியாபார ரீதியாகவும் தெலுங்கு குசேலன் இழப்பை ஈடு கட்டும் அளவுக்கு அதிகமாகவே கல்லாவில் காசு பார்க்கிறாராம் தயாரிப்பாளர் அஸ்வினி தத்!